Readers Write In #410: Pillaiyar Suzhi

Posted on September 22, 2021

22


(by  G Waugh)

‘நீங்கள் தமிழில் எழுதினால் நாங்கள் கண்டிப்பாக படிப்போம்’ என்று என்னிடம் சில நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். ஏன் நான் சிறிதும் எதிர்பார்க்காத ஏன் மாமியார் அவர்களே ஒரு முறை கூறி இருந்தார். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் என் கருத்துக்களை தெரிந்துகொள்ளவேண்டி அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையுமே அது காட்டுகிறது.

தமிழில் நான் எழுதாத முதல் காரணம் நான் ஆங்கிலவழி கல்வி பயின்றது தான். ஆங்கிலம் கற்றால் தான் பெருமை என்று என் பெற்றோர்கள் உட்பட அனைவருமே ஆங்கிலத்தின் மேல் மையல் கொண்ட காலமது.  ஆனால் நான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கிலம் தனது மவுசை இழந்ததை போல தான் உணர்கிறேன். என் பத்து வருட ஐடி அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பல பாடங்களில் ஒன்று இந்த துறையில் ஊரார் மெச்சும் அளவுக்கு வளர்ச்சிபெற நல்ல ஆங்கிலம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்ற ‘எனக்கு மட்டும்‘ கசப்பான உண்மையை தான்.

என் பாலபருவத்தில் வாராவாரம் தி ஹிந்து செய்தி தாளின் நடுப்பக்க கட்டுரைகளை எடுத்து அதில் மிக கடினமான சொற்றொடர்களை என் தந்தை பென்சில் வைத்து கோடிட்டு விடுவார். நான் குளித்து விட்டு வந்தபின் ஆக்சிபோர்ட அகராதியில் அவற்றிற்கு அர்த்தம் கண்டுபிடித்து அவைகளை 1993 -96 டைரிகளின் நிரப்பப்படாத பக்கங்களில் நான் எழுத வேண்டும். எனக்கு கொஞ்சமும் உவப்பில்லாத இந்த பயிற்சிகளுக்கு நான் சிலநேரம் டிமிக்கி கொடுத்தாலும், நான் அரைமனதோடு அவற்றை மேற்கொண்ட நாட்களில் நிறைய ஆங்கிலம் கற்றிருக்கிறேன் என்ற உண்மையை என் நண்பர்களுடன் நான் உரையாடும்போது தான் நான் பின்னாளில் உணர்ந்தேன். சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி ஹீரோக்கள் ஹீரோயின்களை கவர்வதற்காக சில நேரம் தங்கள் ஆங்கில புலமையை அவிழ்த்துவிடும் போது என் நண்பர்களை விட நான் இந்த ‘ஸ்கில்லில்’ மிகவும் கைதேர்ந்தவன் என்று நினைத்து பல நேரம் புளகாங்கிதம் அடைந்ததும் உண்டு. நான் என் ரெண்டுங்கெட்டான் வயதில் கிளாஸ் மானிட்டர் ஆக பதவி ஏற்றுக்கொண்டபின் பல முறை என் வகுப்பில் ‘திமிரு பிடித்த பெண்களை’ மிரட்டுவதற்காக என் ஆங்கில புலமையை ரஜினிகாந்த், கமல்ஹாசனை போல் அவ்வப்போது அவிழ்த்து விட்டதும் உண்டு. அதே பெண்கள் சில நாட்களுக்கு பிறகு ‘நீ அசத்தலாக ஆங்கிலம் பேசுகிறாய்’ என்று என்னிடம் மூக்கை உரிந்துகொண்டே உருகியும் இருக்கிறார்கள்.

இந்த செய்திகள் எல்லாம் வெகு விரைவில் என் க்ளாஸ் டீச்சர்களுக்கு தெரிந்து போய் அவர்களில் பலர் என்னை ஆண்டு விழாவிற்காக ஷேஸ்பியர் , பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய நாடகங்களில் நடிக்க அழைப்பார்கள். நான் சிறுவயதில் இருந்தே பார்க்க மிக கரியவனாக இருக்கும் காரணத்தால் என்னை எந்த ஆங்கில ஆசிரியரும் ஆரம்பத்தில் அணுக்கமாக பார்க்க மாட்டார்கள். பின்னர் என் ஆங்கில புலமையை கண்டபின் என் நிறத்தை முற்றிலும் மறந்து என்னை வாரி அணைப்பர். ஆங்கில நாடகங்களில் என்னுடன் நடித்த  அனைவருமே ஒன்று சிவப்பாகவோ அல்லது குறைந்த பட்சம் மாநிறமாகவோ இருந்துதான் நான் கண்டிருக்கிறேன்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ந்து எனது ஆங்கில ‘ஈகோ’ வை ஆண்டிபயாடிக் கொடுத்து கொழுக்க வைக்கும் வேலையைத்தான் செய்து வந்தன.  தமிழை கண்டாலே பெரியார் சொன்னது போல ஏதோ ‘நீச’ பாஷயை பார்ப்பது போலத்தான் பார்த்து வந்திருக்கிறேன். ஐடி வேலையில் சேர்ந்தவுடன் நாவல் வாசிக்கும்பழக்கம் உருவான பின்கூட தப்பி தவறி கூட ஒரு தமிழ் புத்தகத்தை தொட்டுவிட கூடாது என்று விடாப்பிடியாக நினைத்ததுண்டு. ஆனால் விரும்பியோ விரும்பாமலோ எனக்கே தெரியாமல் என் DNA -வில் என் தாய்மொழி ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்ததை உணர சில வருடங்கள் பிடித்தது.

ஒவ்வொருவாரமும் தமிழ் ஹிந்து நாளிதழின் நடுப்பக்கம் என்ன காரணத்தினாலோ என்னை தொடர்ந்து ஈர்க்க ஆரம்பித்தது. ஆழி செந்தில்நாதன் , சமஸ் போன்ற தேர்ந்த தமிழ் பத்திரிகையாளர்கள் என்னை அறியாமல் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த மொழி பற்றை அவ்வப்போது உசுப்புவார்கள். நல்ல தமிழை உச்சரிக்கும்போது அது நாவில் ஏற்படுத்தும் சுவை, மனதில் எழுப்பும் சலனங்கள் எல்லாமே எனக்கு பிடித்துப்போக ஆரம்பித்தன. “தமிழ் ஒருவனுக்கு ஞானத்தை மட்டும் அல்ல, ரௌத்திரத்தையும் பழக்கும்” என்று பாரதி சொன்னதாக ‘கற்றது தமிழ்’  ஜீவா சொல்லும் காட்சியின் அர்த்தமும் எனக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது.

பொன்னியின் செல்வன் நான் முதன் முதலாக படித்து முடித்த நாவலாக இருந்தாலும் தமிழினால் என்னை கட்டி போட்ட முதல் படைப்பு எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உபபாண்டவம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களும், கற்பனை வெள்ளத்தால் நிரம்பி வழியும் தரிசனங்களும், மஹாபாரத காவியத்தை ஒரு இங்கமர் பெர்க்மான் சினிமாவை போல் எனக்கு காண்பித்தன. நாம் அன்றாடம் பேசும் ஒரு மொழி ஒரு நல்ல எழுத்தாளன் கையில் சிக்கும்போது அதனால் எத்தனை, எத்தனை வண்ணமான வடிவங்களை பெற முடியும் என்பதையே அந்த நாவல் எனக்கு காட்டியது.

ஆனால் கைவசம் மஹாபாரதம் என்னும் காவியத்தின் துணை கொண்டு மட்டுமே தனது ஆற்றலின் மூலம் எஸ். ராமகிருஷ்ணனால் உபபாண்டவத்தை ஒரு நவீன கால செவ்வியல் படைப்பாக உருவாக்க முடிந்தது. ஆனால் அது போல் எந்த ஒரு உதவியும் இல்லாமல் வெறும் தனது craftஎன சொல்லபடும் வித்தையை வைத்தே தமிழ் என்னும் மரணப்படுக்கையில் இருக்கும் மொழிக்கு ஒருவரால் அமரத்துவம் தரமுடியும் என்றால் அதை செய்து காட்டியவர் லா சா ரா மட்டுமே. அவரது memoir- ஆன சிந்தாநதி சிறிதும் பிரம்மாண்டங்களற்ற தனது சலிப்பூட்டும் அன்றாட வாழ்வினால் மட்டுமே கட்டி எழுப்பப்பட்ட ஒரு பெருஞ்சாதனை.

ஒரே மொழி ஹிப் ஹாப் தமிழா மாதிரி ஒருவரின் கையில் ‘மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே’ என குப்பை குளமாக மாறுவதும், லா சா ரா போன்ற ஒருவரிடம் கோவில் கோபுரமாக மாறுவதும் என்னை வியக்க வைக்க தவறியதே இல்லை. தமிழிலும் வெகு சில பத்திரிகைகளை தவிர அனைத்துமே நல்ல சுவையான தமிழையோ நல்ல தமிழை உருவாக்கிய இலக்கிய மேதைகளையோ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நான் கண்டதே இல்லை.

தமிழின் எல்லையற்ற சொற்களஞ்சியமும், அம்மொழியின் எண்ணற்ற சாத்தியங்களும் நமது மறக்கப்பட்ட இலக்கியவாதிகள் படைத்த நாவல்களின் பழுப்பேறிய காகித பக்கங்களில் மட்டுமே ஒளிந்து கொண்டிருக்கின்றன. ‘தமிழா தமிழா’ என்று அன்றாடம் சமூக ஊடகங்களில் முழக்கிமிடுவாதாலோ, ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதால் மட்டுமே நமது மொழியையும் அதன் அசாத்தியமான பாரம்பரியத்தையும் காப்பாற்றிவிட முடியாது.

உலகமயமாக்கப்பட்ட இன்றைய சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பிராந்திய மொழிகளின் பங்கு தொடர்ந்து கேள்விக்குறி ஆக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முதலாளித்துவம் அனைத்து மொழிகளையும் தனது லாபம் என்னும் ஒரே மொழிக்கு ஏற்றவாறு மரபணு மாற்றம் செய்யும் வேலையை செய்துகொண்டே இருக்கும், அது தவிர்க்கமுடியாது என்றாலும் அதனை தவிர்க்கும் முயற்சிகளை நாம் விடலாகாது. அந்த முயற்சிக்கு பெருமளவு வலு சேர்க்க ஒரே வழி நாம் அனைவரும் தமிழ் மொழியையும் அதன் உச்சபட்ச சாதனைகளையும் பயில்வதும் பழகுவதும் மட்டுமே ஆகும்.அம்முயற்சியில் ஒரு சிறு முன்னெடுப்பாகமட்டுமே நான் முதன்முறையாக ஒரு கட்டுரையை தமிழில் இயற்ற முயற்சித்திருக்கிறேன். சிறுவயதில் இருந்தே அதனை வெறுத்த, அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஆராதித்த என்னை போன்ற ஒருவனையே தமிழ்மொழியால் கட்டி போடமுடியும் என்றால் திறந்த மனதோடு எந்த முன்விரோதமும் இல்லாமல் அணுகும் உங்களையும் பிணித்து வைப்பதில் அதற்கு எந்த தடையும் இருக்காது.இன்று முதல் நான் தமிழிலும் எழுத துவங்கியிருக்கிறேன், மேற்சொன்ன காரணங்களுக்காக. மெல்ல சாகும் தமிழுக்கு அஞ்சலி செலுத்தவாவது ஒரு நாலு பேர் இருப்போமே!