Readers Write In #412: Kaalathai thindra gadigaram

Posted on September 24, 2021

0


(by Raghu Krishnan)

கடிகாரங்களில் முதல் இடத்தில் இருப்பது Rolex. 
அடுத்த இடத்தில் இருப்பவை Tag மற்றும் SWATCH groups-Omega, Longines போன்ற கடிகாரங்கள்.
கடை நிலையில் ஜப்பானிய Seiko, Citizen போன்றவை.

Quartz கடிகாரங்கள் பாட்டரியால் இயங்கும் தந்திரங்களே.

Rolex, Tag, Seiko போன்றவை நூற்றுக்கணக்கான பொருட்களை உள்ளடக்கிய நுண்ணிய இயந்திரங்கள்.
இவை தங்கள் திறனால், துல்லியத்தால் (accuracy) தங்கள் இடங்களை அடைகின்றன.

Seiko தினம் +/- 30s. மாதத்தில் பல நிமிடங்கள் வேறுபடுத்திக்காட்டும்.
Tag தினம் +/- 15s. மாதத்தில் சில நிமிடங்கள் வேறுபடுத்திக்காட்டும்.
Rolex தினம் +/- 2s. மாதங்களுக்குப் பிறகும் வேறுபாடு ஒரு நிமிடத்திற்கும் குறைவே.

இதில் எங்கே HMT ?

முதலில் HMT என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு — அது முதல் இந்திய கடிகாரக் கம்பெனி. நஷ்டத்தால் மூடப்பட்டு விட்டது.

HMT தான் எங்கள் பள்ளிக்காலத்தில் கிடைத்த ஒரே கடிகாரம். பதின்ம வயதினருக்கு அப்போதுகிடைத்த பரிசுப்பொருள்கள் சைக்கிள், கடிகாரம் போன்றவையே. இன்று போல் மோட்டார்சைக்கிள், ஐபோன், கார் அல்ல.

பத்தாவது முடித்த கையோடு கிடைத்தது HMT Kohinoor. அதை நான் தொள தொள என்று அணிந்துசெல்வதை எங்கள் வீட்டின் அருகாமையில் இருந்த லைப்ரரி கம் கடிகார ரிப்பேர் செய்யும் ஞானிஅங்கிள் பார்த்து கூப்பிட்டு இது பிரேஸ்லெட் அல்ல, இதை சற்று இறுக்கமாக அணிய வேண்டும் என்று சரி செய்து தந்தார்.

HMT 10 நாட்கள் ஓடினால் 10 நிமிடம் முன்னோ பின்னோ செல்லும்.
அதனாலேயே HMTக்கு இதயத்தில் மட்டுமே இடம். 😁

என்னிடம் இருக்கும் HMT:-

2013 — இது ஒரு உற்சாகமான காலம். தினமும் watchuseek தளத்தில் வரும் மறுமொழிகளைப் படிப்பதில் பெரிய ஆர்வம். அதில் வரும் கடிகாரங்களைப் பற்றிய கருத்துகள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதில் அனேகரும் சொல்லும் வாழ்த்து “ஆரோக்கியத்துடன்அனுபவியுங்கள்.” “Enjoy in good health.”

டிசம்பர் 2013ல் முதல் வடிவமைப்புப் போட்டி. இதை முன்னெடுத்தது டெஹ்ராடூனைச் சேர்ந்த ஒரு டாக்டர் இளைஞன் ப்ரதீக்.

இதில் 3 போட்டியாளர்கள் தலா 3 விதங்களில் 9 கடிகாரங்களை சமர்ப்பித்தார்கள். இந்த 9 கடிகாரங்களுக்கு மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவை அடுத்த சுற்றுக்கு சென்றன.

இந்த மூன்றும் மீண்டும் வாக்குகளுக்காகப் போட்டி போட்டன. இதில் ஒன்று தேர்வானது.

கடிகாரத்திற்கு பெயர் சூட்டும் படலம் ஆரம்பமானது. ஆர்டர் செய்தவர்கள் பல நாட்டினர். ஆனால் அனைவரும் ஒப்புக் கொண்டது ஓர் இந்திய பெயருக்கு.

இப்போது மக்கள் தங்கள் விருப்பமான நிறத்தையும் (பச்சை, நீளம், சிவப்பு) எண்கள் (அரபிக், தேவநாகரி) அமைப்பையும் தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம். மொத்தம் 250 கடிகாரங்கள். ஆர்டர் சுமார் 150 போல வந்தது. என் தேர்வு பச்சை தேவநாகரி.

ப்ரதீக்கிற்கு ஏற்கனவே HMT நிறுவனம் ஒரு White pilot — blue hands செய்து கொடுத்திருந்தார்கள். அந்த ப்ராஜெக்ட் ஒரு பேசப்பட்ட வெற்றி.
இப்போதைய திட்டம் — பிரதீக் HMT உடன் இணைந்து தேர்வான வடிவமைப்பில் கடிகாரம் செய்து தருவதாக ஒப்பந்தம் ஆனது.

Watch specs — 40mm — HMT movement — 17 jewels-glassback — leather strap incl speedpost delivery.

ஏப்ரல் 2014 USD 89 பணம் செலுத்தினேன். HMT நிறுவனம் ஆள் குறைப்பு மற்றும் மூடுதல் பேச்சு, தயாரிப்பில் தாமதம், பொருட்களின் விலையேற்றம் என பல தடங்கல்கள். விளைவு மேலும் தாமதம்.

விவாதத்தில் காணப்பட்ட சுறுசுறுப்பு இப்போது செயலில் மிகவும் மெதுவாக செல்வதாக எனக்குப்பட்டது.

2015ல் கூடுதல் பணம் USD 70.

“என் மைண்ட் வாயிஸ் — நேரமே சரியில்லை.”

2016 ஓரு வழியாக கடிகாரங்கள் டெலிவரி தொடங்கியது. கடிகாரம் கிடைக்கப் பெற்றவர்கள் படங்களைப் பகிர்ந்து கொண்டனர். நன்றாக வந்திருந்தது. ஆனாலும் சில பேரிடமிருந்து குறைகள் தெரிய வந்தன. கண்ணாடி கழன்று விடுகிறது. நேர முள் சரியாகப் பொருத்தப்படவில்லை.

ப்ரதீக் — திருப்பி அனுப்புங்கள் சரி செய்து தருகிறேன்.
கடிகாரத்திற்கு காத்திருந்தோர் — எங்களுக்கு அனுப்புவதை எந்த தவறில்லாமல் அனுப்பவும் என்றனர்.
ப்ரதீக் — எல்லோரும் சற்று தாமதத்தைப் பொறுங்கள் நான் மேலும் QC செக் செய்து அனுப்புகிறேன்.

2016 செப்டம்பர் HMT முடப்பட்டே விட்டது. ப்ரதீக் சில HMT வேலையாட்களைக் கொண்டு எப்படியோ மாதத்திற்கு சுமார் 10 கடிகாரம் வீதம் அனுப்பத் தொடங்கினான்.

என் ஆர்டர் 133/250. 2016 முடிந்து இப்போது 2017.
நான் watchuseek தளம் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.

ஏப்ரல் 2017 பிரதீக் மெயில் — முகவரி அனுப்பவும்.
மே 2017 பிரதீக் மெயில் — மொபைல் எண் அனுப்பவும்.
ஜுன் 2017 — தங்களுக்கு அனுப்பிய பார்சல் திரும்பி விட்டது.
முகவரி, மொபைல் எண் சரி பார்த்து வீட்டில் இருக்கும் நேரத்தையும் அனுப்பவும்.

ஆகஸ்ட் 2017ல் ஓரு வழியாக கடிகாரம் என் வீடு வந்து சேர்ந்தது.

2018/2019/2020 — சிலர் கடிகாரம் தான் இல்லை பணம் திருப்பிக் கொடு என்று.

ப்ரதீக் காணாமலேயே போய் விட்டான்.

சிலர் இதை ஒரு கனவாக எண்ணி கடந்து செல்வதே நல்லது என்று அறிவுரை.

கடிகாரத்தின் பெயர் :-
ஐராவதா — வெள்ளை யானை.

எவ்வளவு பொருத்தமான பெயர். 😳