Readers Write In #414: Kuttipaapaakkal (Sirukadhai)

Posted on October 11, 2021

8


(by G Waugh)

2000

நான் அதுவரை பார்த்த குழந்தைகளில் மிகவும் வித்தியாசமானவன் நித்தின். எங்கள் 1BHK அபார்ட்மெண்டின் கீழே கட்டப்பட்ட வேறொரு 1BHK அபார்ட்மெண்டில் புதிதாக தன் தந்தை தாயுடன் குடியேறினான். அப்போது அவனுக்கு ஒரு வயது கூட இருக்காது. நான் அது வரை வாழ்ந்த வீடுகள் அனைத்துமே இது போன்ற காம்ப்ளெக்ஸ்களில் அமைந்தவை தான். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தையோ ஒரு சிறுபிள்ளையோ இருக்கும். ஒவ்வொரு வீட்டுத்தலைவரோ தலைவியோ மற்றவீட்டுக்காரர்களோடு உரையாட முதல் அடித்தளம் அமைத்து கொடுப்பது அந்த வீட்டு பிள்ளைகளாக தான் இருக்கும். அதனாலேயே ஒவ்வொரு வீட்டு பெண்ணுக்கும் ஆணுக்கும் தங்களது பெயர்களை வெளியே அறிவிக்க வாய்ப்புகள் அமையாமலேயே சென்று விடும். பிச்சைமணி என்கிற என் அப்பாவின் பெயர் ‘ஜீவாப்பா’. லதா என்ற என் அம்மாவின் பெயர் ‘ஜீவாம்மா’.

வழக்கமாக ஒரு கைக்ககுழந்தையை ‘வாடா கண்ணா’ என்று அழைத்தால் முதல் ஓரிரு கணங்களுக்கு அது ஒன்றும் புரியாமல் திரு திருவென்று விழிக்கும். பெரும்பாலான கணங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் அவை செல்ல ஒப்பவே ஒப்பாது. ஆனால் நித்தின் என்னை சந்தித்த முதல் கணமே என் சட்டையை பிடித்து இழுத்து நான் அழைக்காமல் என்னிடம் வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினான். நான் ஒரு குழந்தையின் ஒட்டு மொத்த பரிணாம வளர்ச்சியை முதன் முதலாக கவனித்து கற்றது அவன் மூலம் தான். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது இருக்கும்.  

விடுமுறை நாட்களில் என் வயது பையன்களுடன் நான் விளையாடுவதைக்காட்டிலும் அதிக நேரம் இருந்தது நித்தின் வீட்டில் தான். அவன் குளித்துவிட்டு வந்த பின்பு நித்தின் ஆண்டி அவனை நான் என்னிடம் எத்தனை முறை கொடுக்க சொன்னாலும் கொடுக்கவே மாட்டார். அவனது கொழு கொழு ஈர உடலைபிடித்து அவனை துண்டால் சுத்தம் செய்து உடலெங்கும் அந்த அறையே பவுடர் புகையால் சில நிமிடங்கள் மறையும் அளவுக்கு பவுடர் போட்ட பின்பு அந்த ஆண்டி தனது கண்களுக்கு போடும் உருண்டையான மைடபபாவை எடுப்பார். தனது eyebrow பென்சிலை எடுத்து அவனுக்கு வில் போன்ற வளைவான பெரிய புருவங்களை வரைவார். பின்னர் அப்பென்சிலின் தட்டையான பின்பகுதியின் மூலம் அந்த திறந்துவைத்த மை டப்பாவின்  நடுவில் குலவைக்கல்லை குத்துவது போல் தன விரல்களால் ஆழமாக ஒரு குத்து குத்தி ஒரு வட்டம் நிறைய மையை லாகவமாக அள்ளி அவனது நெற்றியிலும் கன்னத்திலும் இரு குட்டி வட்டங்களை வைப்பார்.

‘ஆண்டி இப்போவாச்சும் குடுங்க நான் அவனுக்கு டிரஸ் போட்டு விடறேன்’

என்று நான் லேசாக இறைஞ்சும் குரலில் கேட்டதும் தயக்கத்துடன் தருவார். 

‘நான் உன்ன வேல வாங்கறேன் னு உங்க அம்மா என்னை தப்ப நெனச்சு பாங்கடா!’

அவன் கொஞ்ச நேரம் என் கைகளிலேயே விளையாடுவான். நான் அவனை குஷிப்படுத்தும் வகையில் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருப்பேன் . நான் அடிக்கடி செய்யும் சேட்டைகளும் வாஞ்சைகளும் சில நேரங்களில் அவனுக்கு அலுத்தாலும் எனக்காகவே போனாக போகிறது என சில நேரம் சிரித்து கொள்வான். என் கைகளில் இருக்கும் ஒரு கணம் கூட அவன் எதற்காகவும் அழுததே இல்லை.

‘நித்தின் எப்போவுமே சிரிச்சிட்டே இருக்கான் ஆண்டி’

என்று நான் இளித்தபல்லோடு சொல்லும்போது என் அம்மா கூட இருந்தால் ‘அப்படி எல்லாம் சொல்லி பிள்ளைமேல கண்ணு வைக்க கூடாது’ என்று சொல்லி என்னை அதட்டுவாள்.

***

நித்தின் என் ஞாபகம் சரியாக இருக்கும் என்றால் அவனது பதினோராம் மாதம் முதன் முறையாக நடக்க துவங்கினான். வழக்கமாக முட்டு குடுக்க எதையாவது வைத்து அவனை நிற்க வைத்து விட்டு அவனுக்கு விளையாட்டு காட்டிகொண்டிருப்பவன் ஒரு முறை அவனை ஒரு மரமேஜையின் மேல் ஏற்றிவைத்து சுவற்றோரம் சாய்ந்து நிற்க சொன்னேன். அவன் எப்படியோ தடுமாறி நிற்க முயற்சி செய்து பின்னர் விழுந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணத்தினால் உந்தப்பட்டு குடு குடு வென்று தனது முதல் அடிகளை எடுத்து வைத்து மேஜையின் அந்த பக்கத்தில் இருந்து எனது பக்கத்திற்கு ஓடி வர முயற்சி செய்தான். ஓரிரு முறை அப்படி செய்யும்போது அவன் செய்தவற்றை நான் சரி வர கவனித்து வியக்க வில்லை. ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவனுக்கு பருப்புசாதம் எடுத்து வந்த அவனது அம்மா அவன் ஓடி வர முயற்சிப்பதை கண்டதும் வியந்தும் மலைத்தும் நின்றார். அவனை ஆசையோடு தூக்கி அணைக்க வரும்முன் அந்த ஓரிரு கணங்கள் ஆண்டியின் கண்களில் சிறிய நீர்த்துளி ஒன்று எட்டிப்பார்த்து மறைந்ததை கண்டேன். 

நான் பலமுறை அவனை என் தோளில் போட்டுக்கொண்டு எங்கள் காம்பவுண்டு முழுக்க நடந்து நடந்து தூங்கவைத்திருக்கின்றேன். சினிமாவில் வருவது போல் ஒரு நாள் அவன் பெரியவன் ஆனபின்பு என்னை எதிர்த்து பேசினால் அவன் அம்மா எனக்காக வந்து ‘ ஜீவா உன்னை தோளில் தூக்கி போட்டு வளர்த்தவன் டா! அவனிடம் மரியாதையாக பேசு’ என்று வக்காலத்து வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் கற்பனையில் திளைத்ததுண்டு. என் பெற்றோர்க்கு ஒரே பிள்ளையாக பிறந்த எனக்கு அவ்வயதில் ஒரு தம்பியோ தங்கையோ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இல்லாமல் இருந்ததே இல்லை. நித்தின் போன்ற மாற்றார் வயிற்று பிள்ளைகளோடு எளிதாக உருவான அந்த பந்தம் காலத்திற்கும் நிலைக்கவேண்டும் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் நான் தப்பு கணக்கு போட்டது வெகு விரைவில் எனக்கு புரிந்தது.

டூ வீலர் பார்க்கிங் உள்ள 1bhk அப்பார்ட்மென்டில் இருப்பவர்கள் சில ஆண்டுகளில் கார் பார்க்கிங் இருக்கும் 2bhk அப்பார்ட்மெண்டிற்கு செல்லவேண்டும். அப்படி சென்றால் தான் அவர்கள் தத்தமது சமூகத்தில் மதிப்பிற்குரியவராக நடத்த படுவார்கள் என்ற நவதாராளமய அறங்கள் நமது நாடெங்கும் பரவ ஆரம்பித்த காலமது. நித்தின் அப்பா விரைவில் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு 2BHK வீட்டை சொந்தமாக வாங்கினார். நித்தினுடைய மூன்றாவது வயதில் எங்கள் வீட்டிற்கு கீழே வாழ்ந்த வீட்டை காலிசெய்து விட்டு அங்கே இடம் பெயர்ந்தார்.

***

2005

நான் பதினெட்டு வயதை அடைந்தபோது என் அப்பாவின் அக்கா மகனான மாமாவிற்கு திருமணம் முடிந்த அடுத்த வருடமே குழந்தை பிறந்திருந்தது. அப்போது நாங்கள் எங்களது 1bhk அபார்ட்மெண்டை காலி செய்து விட்டு வேறு ஊரில் பேருந்து நிலையம் அருகே  ஒரு posh ஏரியாவில் உள்ள ஒரு 2bhk அபார்ட்மெண்டில் குடியேறி இருந்தோம். எனது மாமாவின் 2bhk வீடு எங்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியே அமைந்திருந்தது. நித்தினை போலவே எனது மாமா குழந்தையான ஹரிஷும் என்னுடன் வெகு விரைவில் ஒட்டிக்கொண்டான். நித்தினை கவர்வதற்காக நான் உருவாக்கிய எல்லா விளையாட்டு வித்தைகளையும் அப்படியே இவனிடமும் செய்துகாட்டி இவனையும் என் வசம் இழுக்க ஆரம்பித்தேன்.

ஹரிஷ் ஒவ்வொருமுறையும் எதற்காகவாவது அழும்போது நித்தின் என்ன காரணத்தினால் இதே மாதிரியான சந்தர்ப்பத்தில் அழுதான் என உடனடியாக என் நியாபக archive-ஐ அலசி பார்த்து விட்டு அவனது அம்மா வரும் முன்பே அவனது அழுகையை நிறுத்தி அவனை சமாதானம் செய்து விடுவேன். இதன் காரணமாக என் மாமாவின் மனைவி சங்கீதா அக்கா நான் கூட இருக்கும் நேரத்தை கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்வார். உண்மையை சொல்லபோனால் அந்த வயதில் பிள்ளைகள் என்பவை எனக்கு முழுக்க முழுக்க அதீத சந்தோஷத்தை தருபவைகளாகவும் நான் என் பள்ளியிலும் கல்லூரியிலும் சோர்வுறும் நாளெல்லாம் வீட்டுக்கு வந்த உடன் எனக்கு புத்துயிர் கொடுக்கும் மருந்துகளாகவுமே பயன்பட்டுவந்தன.

ஒவ்வொரு நாளும் ஹரிஷ் வீட்டிற்கு சென்ற மறுகணமே அவனை என் மடியில் கிடத்திவிடுவேன். அவன் தூங்குகிறான் என்றால் கூட அவனது தூக்கம் கலையாத வாறு அவனை லாகவமாக தூக்கி என் மடியில் போட்டுவிட்டு பட்டாம்பூச்சி சிறகுகள் போல மூடியிருக்கும் அவனது விழிகளையே ஆழ்ந்து பார்த்து லயித்துக்கொண்டிருப்பேன். அவன் என் மடியில் அமரும் கணம் தோறும் என் கழுத்திலும் மூக்கிலும் இடிக்கும் அவனது தலை உச்சியை எந்நேரமும் முகர்ந்து கொண்டிருப்பேன்.  எப்போதும் மூடியிருக்கும் அவனது குட்டி கொழுக்கட்டைகள் போன்ற கைகளை திறந்து உள்ளே என்ன இருக்கின்றது என்று நோக்க முயன்று கொண்டே இருப்பேன்.

அவன் அழ முற்படும் போதெல்லாம் அவனை கைகளில் தூக்கி என் முகத்தை அவன் முகத்தருகே கொண்டு வந்து அவனது இமைக்கா கண்களை நோக்கி லேசாக காற்றூதுவேன். எதிர்பாராத வந்த காற்று அவன் கண்களையும் சிறு தலைமுடியையும் வருடி செல்லும் கணம் தோறும் அவன் அழ நினைத்த காரணத்தை மறந்து லேசாக சிரித்து விடுவான். தலை நின்ற பிறகு சில மாதங்கள் கழித்து அவனை ஒரு பொம்மை போல வித விதமாக தூக்கியும் வளைத்தும் கழுத்தின் மேல் ஏற்றியும் விளையாட விளையாட அவன் தன பெற்றோர்களை விட என்னிடமே அதிகமாக ஒட்டி கொள்ள ஆரம்பித்தான்.

நித்தினை மறந்து ஹரிஷுடனான எனது பந்தம் ஸ்திரப்பட்டுக்கொண்டு வந்த நேரம் மீண்டும் குறுக்கிட்டது காலம். அப்போது ஹரிஷுக்கு சரியாக ஒரு வயது ஒரு மாதம் வயதிருக்கும். எனது மாமா ஏற்கனவே 2bhk  அபார்ட்மெண்ட் வைத்திருந்தவர். அவர் 3bhk வாங்கும் காலம் அவரை அழைத்தது. அமெரிக்காவிற்கு செல்ல முடிவெடுத்தார். என்னிடம் ஒருநாள் அதனை அறிவித்தார். நான் சிறுவனாக இருந்திருந்தால் கண்டிப்பாக அழுதிருப்பேன். எனக்கு அப்போது இருபது வயது. அவர் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க நான் மாமா வீட்டிற்கு போவதை வேகமாக குறைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். கடைசி ஒரு வாரம் நான் ஹரிஷை முற்றிலும் மறக்கவேண்டும் என முடிவு செய்த பின்பு சுத்தமாக அவருடன் இருந்த எனது எல்லா தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டேன். ‘என் பிள்ளை நீ இல்லாமல் அழுகிறானடா நான் இங்கயே இருந்துவிடுகிறேன்’ என்று அவரை சொல்லவைக்க வேண்டும் என நினைத்தேனோ என்னவோ!

அவர் கிளம்பும் நாள் மாலை என்னை என் அம்மா மாமா வீட்டிற்கு அழைத்து சென்றாள். காரில் எல்லா சுமைகளும் ஏற்றிய பின்பு என் மாமா முன் சீட்டில் டிரைவர் அருகே அமர்ந்து கொண்டார். பின் சீட்டில் ஹரிஷ் என் அக்காவின் மடியில் அமர்ந்திருந்தது எனக்கு தெரியும். அவன் முகத்தை நான் காண விரும்பாமல் என் மாமாவிடம் ஏதோ பேசிக்கொண்டும் சுற்றி இருக்கும் தெருவினையும் அதன் மரங்களையும் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வாரமாக என்னை பார்க்காத ஹரிஷ் என்னை மறந்திருந்தாலும் மறந்திருக்க கூடும், மறந்திருந்தாலும் பரவாயில்லை என்று மனதை கல்லாக்கி வைத்திருந்தேன். அப்போது என் அம்மா திடீர் என்று ‘ஹரிஷ்’ என்று அழைத்தார். அவன் திரும்பிய கணம் என் முகமும் என்னை அறியாமல் அவனது கண்களை சந்தித்தது. அக்காவின் மடியில் அமைதியாக இருந்த அவன் பளிச்சென்று ஒரு முறை என்னை பார்த்து மின்னல் போல் ஒரு சிரிப்பு சிரித்தான். கார் மறுகணமே வேகமாக நகர்ந்து என் மாமா வீட்டு வாசலை விட்டு அகன்று சில நொடிகளில் தெருவை விட்டே மறைந்தது.

***

2016

நான் என் அறைக்குள் அமர்ந்திருந்தேன். என் நண்பன் என் முகத்திற்கு பவுடர் போட்டுக்கொண்டும் என் பட்டு சட்டை பொத்தான்களை எனக்கு அணிவித்தும் கொண்டிருந்தான். மூடி இருந்த அறை ஒரு கணம் திறந்து வெளியே முழங்கிக்கொண்டிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ பாடல் என் காதுகளை துளைத்து வந்தது. திரும்பி அறைக்கதவை நோக்கிய நான் சுமார் பதினைந்து வயது  உள்ள ஒரு இளைஞன் உள்ளே நுழைவதை பார்த்தேன்.

“அண்ணா, அப்பா அம்மாவினால் உங்க கல்யாணத்துக்கு வர முடில… என்னை இந்த gift -அ மட்டும் குடுத்துற சொன்னாங்க. தப்ப நெனச்சுக்காதிங்க னு சொல்ல சொன்னாங்கணா. இன்னொரு நாள் வீட்டுக்கு வரோம் னு அப்பா சொன்னாரு” என்றான்.

“நீங்க” என்று நான் யாரென்று தெரியாமல் இழுத்தேன்.

“அண்ணா, நான் நித்தின்” என்றான்.

எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவனை அருகே அழைத்து ஒரு முறை அவனது தோளை தடவி பார்த்து முறுவலித்தேன். ஓரிரு கணங்கள் அந்த கல்யாண அவசரத்திலும் கூட என் மனம் அவனுடன் நான் விளையாடிய தருணங்களை தொட்டு பார்த்து திரும்பியது. 

“உனக்கு என்ன ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்லணா. அம்மா உங்கள பத்தி சொல்லிருக்காங்க” என்று நெளிந்தான்.

அவன் அறையை விட்டு அகன்ற உடன் நான் மணமகன் அறையை மூடி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தேன். நான் எவ்வளவு செல்லமாக நினைத்த அவனுக்கு என்னை சுத்தமாக ஞாபகம் இல்லை. ‘நான் தூக்கி வளர்த்த பிள்ளையல்லவா அவன்?’ என்று நினைத்த போது சிரிப்பும் ஒரு சிறிய கசப்பும் என்னை அறியாமலேயே என்னுள் படர்ந்தன. மனிதர்களுக்கு எந்த வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் சரியாக ஞாபகம் இருக்கும் என்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தபோது மீண்டும் என் அறைக்கதவு திறந்தது.

“ஜீவா! கல்யாண மாப்பிள்ளை!” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

சுமார் முப்பத்தைந்து வயது நிரம்பிய பருத்த உடல் கொண்ட பெண்மணி ஒருத்தி வாசலில் நின்று கொண்டிருந்தாள். கூடவே ஒரு குட்டி பையனும் கையில் செல்பேசியுடன் நின்றிருந்தான்.

“சொல்லுங்க.. நீங்க ” என்றேன்.

“கண்டுபிடி பாப்போம்” என்றாள்.

எனக்கு லேசாக எரிச்சலாக வந்தது. ஒரு வேளை அம்மாவின் தோழிகளில் ஒருவராக இருக்குமா அல்லது அப்பாவுடன் வேலை செய்பவராக இருக்குமா என்று தலையை சொரிந்து கொண்டு யோசிக்க தொடங்கியபோது,

“நான் மாலதி அக்கா டா! தேனாம்பேட்டை ல எங்க பக்கத்துவீட்டுல தான் நீங்க இருந்திங்க! நீ குட்டி பாப்பாவா இருக்கும்போது எங்க வீட்ல தான் விளையாடுவ! நீ இவ்ளோ வருஷம் கழிச்சு எப்படி வளர்ந்துருக்கே னு பாக்கணும் னு ஓடி வந்தேன்! சரி சரி மேடையில பாப்போம்!” என்று சொல்லி அங்கிருந்து அகன்றாள்.