By Karthik Amarnath
மணிகண்டனின் “கடைசி” மாயம்
(Spoilers Ahead for “Kadaisi Vivasayi”)
மணிகண்டனின் கடைசி விவசாயி படத்தின் அனுபவத்தை பற்றி எவ்வாறு எழுதவேண்டும் என்று யோசித்தேன். ஒரு வேளை மனதை மண்ணாக நினைத்து அதற்க்குள் எழுத்துக்களை விதைத்து அதுவே மாயமாக மலர்களை போல் முளைத்தால் படத்தை பார்த்த அனுபவத்துக்கு அது ஈடாக இருக்கும. அனுபவம் அப்படி ஒரு மாயமாக தான் இருந்தது. ஒருவகையில் கேபிரியல் மார்கெஸ் எழுதிய கதைகளில் வரும் மாயம் போல் என்று சொல்லலாம். அவர் கதையில் மௌரீஸியோ என்றவர் போகும் இடமெல்லாம் தங்க வண்ணத்துபூச்சிகள் எவ்வாறு சுற்றுமோ அது போல இந்த படத்திலும் கதாநாயகன் வரும் காட்சிகள் கூடவே அழகான மயிலின் காட்சிகளும் பின் வருவதை பார்க்கலாம். ஆனால் அது போன்ற வெளிப்படயாக தெரியும் மாயத்தை விட காட்சிகள் உள்மனதில் உண்டாக்கும் உணர்ச்சிகள் தான் இந்தப் படத்தின் உண்மையான மாயம். படத்தின் இடைவேளை காட்சியில் வரிசையாக வைத்த மண் தொட்டிகளில் சிரு இலைகள் முளைத்ததை கண்டபொழுது மனம் அடைந்த மகிழ்ச்சி, அது ஒரு தனீ மாயம்.
என்னடா இவன் தினசரி பார்க்கும் ஒரு காட்சியை இந்தளவு மேய்மறந்து பேசுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவகையில் அதுவும் உண்மை தான். அறிவியல் உயிரியல் போன்ற துறைகளில் கண்டுபிடித்ததை வைத்து ஒரு விதையிலிருந்து செடி முளைப்பதை அணு அணுவாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் விஞ்ஞானம் சேகரித்துவைத்த அறிவிலையும் ஒரு சிரு இடைவெளி இன்னும் இருக்கிறது. உயிர் என்பது முதலில் எப்படி உருவாகியது. இன்றுக்கூட விஞ்ஞானிகளால் ஒரு கிருமியின் உயிரணுவிலிருந்து வேறு பிராணிகளின் அணுக்களை உருவாக்கமுடியுமே தவிர உயிரே இல்லாத பொருட்களை வைத்து அந்தக் கிருமியை உருவாக்கும் மாயத்தை இன்னும் அவர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை அறிவுத்தளத்தில் இருக்கும் அந்த இடைவெளியில் தான் வாழ்க்கையின் மகிமை, ஆன்மீகத்தின் பொறுள், யேன் கலையின் ரகசியம் கூட அடங்கியிருக்கோ என்னமோ. அந்த அறியான்மயில் ஒளிந்திருக்கும் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாவிட்டாலும் உணர்ச்சிகளால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு அனுபவம் தான் மணிகண்டனின் கடைசி விவசாயி திரைப்படம்.

விவசாயத்தை பற்றி விஞ்ஞானம் சேகரித்த அறிவு மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எல்லாம் வைத்து பலவிதமான கதைகளை உருவாக்கமுடியும். ஆனால் அது போன்ற ஆராய்வுகள் இப்படத்தின் அடிப்படை இல்லை என்று படத்தின் பத்தாவது நிமிடத்தில் தெரிந்துவிட்டது. பலத்த மின்னல் அடித்து கிராமத்தில் நிற்கும் ஒரு மரம் எரிந்து அந்த கிராமத்து மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைகிறார்கள். எரிந்து போன மரம் பாடப்புத்தகக் கல்விக்கும் அப்பாற்பட்ட அறிவை ஊட்டும் போதி மரம். அதற்கு பரிகாரமாக கிராமத்து மக்கள் கடவுளை பெரிதாக வணங்க முடிவு செய்கிறார்கள். அதே போல இயக்குனர் மணிகண்டனும் இந்தப் படத்தை விவசாயக்கல்வி அளிக்கும் பள்ளிக்கூடமாக அமைக்காமல் அதற்க்கப்பாற்ப்பட்டு மண்ணுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஆன்மீக தொடர்புக்கு ஒரு ஆலயமாக அமைத்துவிட்டார்.
ஆனால் ஆலயம் என்றால் அதில் நிற்கும் மூலவர் யார்? மண்ணா? மனிதனா? இல்லை படத்தின் நாயகர்கள் கும்பிடும் முருகனா? மேலோட்டமாக பார்த்தால் படத்தில் மூன்றுமே சரியான பதில் என்று தோன்றும். ஆனால் திரைக்கதையை கொஞ்சம் மண்வெட்டியால தோண்டினால் மூன்றுமே ஒரே பதில் என்றும் தோன்றும். முருகனை எடுத்துக்கொள்வோமே. படத்தில் முருகனின் பெயர் அடிக்கடி கேட்டால் கூட ஒரு சிலை அல்லது படம் போன்ற அடையாளம் எதுவும் தென்படவில்லை. பிரத்யேகமாக முருகனின் தரிசனம் அவன் பிரதிபலிப்பாக இருக்கும் இரண்டு பெண் மயிலுக்கு இடயே ஒரு ஆண் மயிலின் ரூபத்தில் தான். அந்த மூன்று மயிலும் மண்ணோட சேர்வது தான் படத்தின் மிகப்பெரிய திருப்பம். முருகனை பற்றி அதிகம் பேசுவது விஜய் செதுபதி நடிக்கும் ராமய்யா கதாபாத்திரம். ஆனால் அவன் பேசும்போது முருகனை ஒரு கடவுளாக பார்ப்பது போல் இருக்காது. அவன் ஞானப்பழக்கதை சொல்வதை கேட்டுப்பாருங்கள். முருகனை எதோ கூடப்பிறந்த சகொதரனை போல் நினைத்து பேசுவான்.
ஒரு வகையில் அந்த ராமய்யா கதாபாத்திரத்தையே கடவுளை போல் பார்க்கலாம். எங்கிருந்து வருகிறான் எங்கே செல்கிறான் என்று யாருக்கும் தெரிவதில்லை. உலகச்செய்தியெல்லாம் அவனுக்கு தெரியும் என்பான். மேலும் முருகன் இரு மனைவிகளுக்கு இடயே நிற்பது போல் அவனும் இரு பைகளை தூக்கிக்கொண்டு நிற்பான். கேட்டால் அந்த பைகள் இருக்கும் இடத்தில் அவன் மனைவி இருக்கிறாள் என்பான்.
ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால் ராமய்யா ஒரு கிருக்கன் என்று கூட சொல்லலாம். அவன் உடுத்தும் ஆடையும் முகத்தோற்றமும் வினோதமாக இருக்கும். அவன் சாதாரண சிமென்ட்டு பாதையில் நடக்காமல் கல்லும் முள்ளும் சிதரிய மண் பாதையில் தான் நடப்பான். அவன் நடத்தையும் ஒரு காட்டுமிறாண்டி போல் இருக்கும். ஏனென்றால் அவன் மணமகளை இழந்து தனியாகிவிட்டான். அந்த வகையில் அவன் மண்ணைப்போல் என்றும் சொல்லலாம். ஒருவரின் அக்கரையும் அரவணைப்பிலும் தான் மண் நிலமாக மாரும். இயற்கையாக அதில் முளைப்பது காடும் களையும் தான்.
படத்தில் உண்மையாகவே கடவுள் போன்ற சக்தி யாரிடம் இருக்கிறது என்று கேட்டால் அது நீதி தேவதையின் ரூபத்தில் வரும் ஒரு பெண்ணிடம். ரேச்சல் ரிபெக்கா நடித்த அந்த கதாபாத்திரம். அவள் எடுக்கும் நடவடிக்கைகளில் தான் கதையில் எழும்பும் சொதனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
இது போல படத்தில் பல நிகழ்வுகளுக்கும் இயக்குனரின் தேர்வுகளுக்கும் வெவ்வேரு விளக்கம் கூரலாம். கலை ரீதியாக அமைத்த சினிமாவின் ஒரு அறிகுறி அது. ஆனால் அதற்காக இது வெரும் கலைக்காக அமைத்த சினிமா என்று இடை போட முடியாது. இயக்குனர் மணிகண்டன் செய்த மாயம் என்னவென்றால் இந்தப்படத்தை எளிதாக மக்களிடம் போய்சேரும் கமர்ஷியல் படமாக உருவாக்கியது தான். அவர் படத்தை தயாரிக்க ஆரம்பித்தபோது முதலில் ரஜினிகாந்த்தை கதானாயகனாக வைக்க ஆசைப்பட்டார். அவருடைய நோக்கத்தை யூகித்தால் அதற்கு இரண்டு காரணம் கூறலாம். படத்தின் ஆன்மீக அடிப்படைக்கு ரஜினி ஏற்ற நடிகராக இருந்திருப்பார். அது போக தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் நடிகர் அவர் தான்.
ரஜினி எதனால் இந்த படத்தை வேண்டாம் என்று முடிவு செய்தார் தெரியவில்லை. ஆனால் படத்தில் ஒரு நிகழ்வு பொருத்தமாக தோன்றியது. கிராமத்து மக்களுக்கு நெல் பயிரிடுவதற்கு நிலமும் விவசாயியும் தேவை என்று ஒரு பெரியவரிடம் போய் கேட்கிறார்கள். ஆனால் அந்த பெரியவர் தன் நிலத்தை விற்றுவிட்டார். அதற்கு பதிலாக ஒரு யானையை வைத்து மக்களுக்கு வேடிக்கைக் காட்டி அதிகம் சம்பாதிக்கிறார்.
இந்த சிக்கலிலிருந்து கிராமத்து மக்களுக்கும் இயக்குனர் மணிகண்டனுக்கும் கிடைத்த தீர்வு எழுபத்தைந்து வயது நடிகர் நல்லாண்டி நடித்த மாயாண்டி கதாபாத்திரம். ஒரு கமர்ஷியல் ஸ்டாருக்கு நேர் எதிர்மாறாக திரைப்பட அனுபவமே அதிகம் இல்லாத நல்லாண்டி தான் படத்தின் பெரிய பலம் என்றே சொல்லலாம். மண்ணைப்போல எளிமையாக அமைந்த அவர் கதாபாத்திரம் மனித ரூபத்தில் இருக்கும் ஒரு போதிமரம். எது நடந்தாலும் உணர்ச்சி காட்ட மாட்டார். எல்லா உயிரினங்களுடன் ஒன்றாக வாழத்தெரிந்தவர். மண்ணாகட்டும் மயிலாகட்டும் வீட்டில் வசிக்கும் மாடாகட்டும் இயற்க்கையின் ரகசியத்தை அவர் நன்கறிந்தவர்.
அமைதிக்கும் நிதானாத்திற்க்கும் வடிவமாக அமைத்த அந்த நாயகனின் கதையில் கூட இயக்குனர் மணிகண்டன் கமர்ஷியல் சினிமாவைப்போல நகைச்சுவை, பன்ச்சு வசனம், மாஸ் ஸீன் எல்லாம் இயல்பாக வைத்தது ஒரு சாதனை என்றே சொல்லலாம். அதிலும் படத்தின் முடிவை ஒட்டி வரும் மாஸ் சீன், ஒரு சத்தமே இல்லாத காட்சி, அது தான் படத்தின் மிக ஆழ்ந்த உணர்ச்சியை உண்டாக்கும் காட்சி. கதையை துவக்கி வைத்த சம்பவத்தின் எதிரொலியாக எரிந்த பொதி மரம் திரும்ப உயிர் வந்து அடித்த மின்னல் பின்வாங்கினால் எவ்வாறு மாயமாக இருக்குமோ அதுப்போன்ற வியப்பை கொடுக்கும் ஒரு காட்சி அது.
இதில் துயரம் தரும் விஷயம் என்னவென்றால் கடைசி விவசாயி ஆக நடித்த நல்லாண்டிக்கு இது கடைசி திரைப்படமாக ஆயிற்று. அவர் நம் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் நடித்த மாயாண்டி கதாபாத்திரம் மனதை விட்டு எளிதில் போகாது. அந்த பாத்திரம் மட்டும் இல்லை இந்த திரைப்படமே அது போல தான். இதை கலை படமாகவோ கருத்து படமாகவோ அல்லது ஒரு கமர்ஷியல் படமாகவோ முத்திரை குத்த முடியாது. இயல்பான கிராமத்து வாழ்க்கையின் உறுப்புகளை விதைத்து அதுவே ஒரு திரைக்கதையாக முளைத்து அதை ஒரு ஆர்கானிக் திரைப்படமாக உருவாக்கியது போல் இருந்தது. என்னை பொருத்தவரை இயக்குனர் மணிகண்டன் படைத்தது திரைப்படமே இல்லை. இது ஒரு திரைமாயம்.
Posted on March 14, 2022
0