Readers Write In #464: நான் எப்படி “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தை” புரிந்துகொண்டிருக்கிறேன் ?

Posted on May 19, 2022

7


By G Waugh

“நான் சென்ற வாரம் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் படித்தேன். அதை படித்த எல்லோரும் அதை சிலாகிக்கும் அளவுக்கு அதில் அப்படி ஒன்றும் இல்லையே?” என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். நானும் அந்த புத்தகத்தை இதற்கு முன்பு படித்திருக்கவில்லை என்பதால் எனக்கு மூன்று நாட்கள் நேரம் தருமாறு வேண்டிக்கொண்டு படித்து முடித்துவிட்டு அதை பற்றி விவாதிக்கலாம் அன்று சொல்லி அந்த புத்தகத்தை அவரிடம் இருந்து வாங்கி வந்தேன். இரண்டு நாட்களில் முடித்தேன். அவர் சொன்னது போல எனக்கும் பெரிதாக அந்த புத்தகத்தில் ஒன்றும் பிடிபடவில்லை, ஆரம்பத்தில்.

சில நாட்கள் சென்ற பிறகு நான் முன்பு எப்போதோ பார்த்து ரசித்த ரஜினிகாந்த் நடித்து எனக்கு மிகவும் பிடித்த அண்ணாமலை படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த படத்தின் முதல் பாதியை காணும்போதெல்லாம் “எவ்வளவு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வெகுளியாகவும் ரஜினி வாழ்ந்துகொண்டிருக்கிறார்! இந்த கதை இப்படியே நீடித்திருந்து படம் முழுவதும் நிரம்பினால் எவ்வளவு நிறைவாக இருக்கும்?” என்றெல்லாம் எண்ணியது உண்டு. ஆனால் கதை இடைவெளி நோக்கி நகர்கையில் ரஜினியின் வீடு இடிக்க படும், வெகுளி ஆன ரஜினி வஞ்சம் வைத்து பழி தீர்ப்பவர் ஆக மாறுவார், நிம்மதி குலையும், பார்க்கும் நமக்கும் மனம் வேதனைப்படும். அண்ணாமலை பார்க்கும்போதெல்லாம் நான் இப்படி எண்ணியது உண்டு – ” ஒரு படம் முழுவதும் சண்டை சச்சரவுகளோ அல்லது விதியின் விளையாட்டுகளோ இல்லாத , conflict என்பதே மருந்துக்கும் இல்லாத ஒரு கதையை உருவாக்க முடியுமா?” 

நானும் இருபது வருடங்களாக படம் பார்ப்பவன். இந்தி, இரான், ஜப்பான், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் வெவ்வேறு அளவில் எனக்கு நிறைவை தந்திருந்தாலும் conflict – ஏ இல்லாத முழுக்க முழுக்க சந்தோஷத்தையோ, சங்கடங்களே  இல்லாத நிறைவையோ தரும் கதை அம்சம் உள்ள ஒரு படத்தையும் நான் இது நாள் வரை பார்த்தது இல்லை. நாளை நான் ஒரு கதை எழுதினால் அப்படி ஒரு கதையை எழுதி வரலாறு படைக்க வேண்டும் என்று பல முறை எண்ணியதுண்டு.

அப்படி எண்ணும்போதெல்லாம் உடனடியாக தோன்றும் அடுத்த கேள்வி “அப்படி ஒரு வாழ்க்கையோ கதையோ உண்மையிலேயே சாத்தியமா?” என் வாழ்வின் எத்தனை பகுதிகளில் எனக்கு விதியின் வில்லத்தனமான விளையாட்டோ அல்லது என் சுற்றார்களுடன் எனக்கு சச்சரவுகளோ அறவே  இல்லாத தருணங்கள் அமைந்திருக்கின்றன என்று யோசித்துப்பார்ப்பேன். நான் பெரியவன் ஆன நாள் முதல் இந்நாள் வரையில் பல நேரங்களில் விதியின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, பெரும் அவதிக்கு ஆள் ஆனவனாக பெயர் பெற்றிருந்தாலும் என் பால்ய பருவம் முதல் ஆதி பதின் பருவம் வரை எந்த ஒரு சிக்கலும் இல்லாத, யாருடனும் சண்டைகள் போடாத கோபம் என்ற உணர்வுக்கு ஒரு சிறு பிஸ்கட் கூட போடாத சூழ்நிலைகளும் தருணங்களும் நிறைந்த வாழ்க்கையையே நான் பெரும் அளவில் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதே உண்மை. இத்தனைக்கும் என் தந்தைக்கு என் ஐந்தாம் வயது முதலே அவரது தொண்டையிலும் நாக்கிலும் புற்று நோய்  ஏற்பட்டு வருடக்கணக்கில் அவர் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் அலைந்து திரிந்ததெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அந்த அவஸ்தையை எல்லாம் என் பெற்றோர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டு என் வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் சீர்குலைக்க அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அப்படி எனக்கு அவர்கள் எடுத்துரைத்திருந்தாலும் அதை புரிந்துகொள்ளக்கூடிய முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்காது என்றே நினைக்க தோன்றுகிறது. தினமும் பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் விளையாடியும் படித்தும் விட்டு வகுப்பில் முதல் மாணவனாகவும் வகுப்பின் கிளாஸ் லீடர் ஆகவும் கோலோச்சி கொண்டிருந்த எனது வாழ்க்கைக்கு என் தந்தையார் படும் துன்பங்களெல்லாம் எந்த விதத்திலும் ஊறுவிளைவித்திருக்காது என்பதே உண்மை. 

என் வாழ்க்கையின் முதல் பதினைந்து வருடங்களில் நான் முன்பே சொன்னது போல எனக்கு பெரிய சிக்கல்களும் விதியின் நம்பியார் சூழ்ச்சிகளும் எதுவுமே ஏற்படாமல் ஒரு  smooth ஆன அதே நேரத்தில் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெரும் போக்கே பெருமளவில் நிலவியது என்பதே உண்மை. நீங்களெல்லாம் இந்த தருணத்தில் ஓர்   எதிர்வினை ஆற்றலாம் “பெரியவர்கள் ஆன பிறகு என் பால்ய வாழ்க்கை ஆகா ஓஹோ என்றிருந்தது என்று சொல்லுவது அனைவருக்கும் இயல்பு தான்! நீ நோஸ்டால்ஜியா-வினால் அப்படி பேசுகிறாய்! நீயும் அப்போது பல பிரச்னைகளில் உழன்றிருப்பாய் ! இப்போது மறந்திருப்பாய்! பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை கொண்டவர்கள் இபிபூமியில் எவரும் இலர் ! நன்றாக யோசித்து பார்” என்று. ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. வாழ்க்கையின் மேல் பெரிய எதிர்பார்ப்புகளோ, கனவுகளோ இல்லாமலும் அதே நேரத்தில் தன்னம்பிக்கையும் ஒரு அளவுக்கு சுய பிரக்ஞையும் கொண்ட அனைவருமே ஒரு விதத்தில் வாழ்க்கையை சுலபமாகவும் நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. எனது பால்ய காலத்தில் நான் சந்தோஷமாகவும் நிறைவாகவும் வாழ தேவையானவையை ஒன்று என் பெற்றோர்கள் அளித்தனர் அல்லது அவற்றை உருவாக்கிக்கொள்ளும் திறனை இயற்கை எனக்கு அளித்திருந்தது என்றே நினைக்க தோன்றுகிறது. அப்படி எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் கிளாஸ் லீடர் ஆக வகுப்பறைக்குள் நுழையும் என் உருவத்தை கண்டு அது வரை சன்னமாக அலறிக்கொண்டிருக்கும் என் வகுப்பு நண்பர்கள் அனைவரும் ஒரு கணத்தில் அமைதி ஆகி டீச்சர் வரும் நேரத்தில் முழுமையான டிசிப்ளின்-க்கு வரும் மாஸ் காட்சிகளெல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. நான் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ராஜாவாக தான் இருந்திருக்கிறேன். (அதற்கப்புறம் full- ஆ கவுண்டர் சொல்வது போல் சாணி அடி சக்க அடி தான்!)

எனவே நான் சொல்ல வருவதெல்லாம் இது மட்டும் தான். வாழ்க்கையில் பிரச்னைகளும், சங்கடங்களும் பெரும் அசௌகரியங்களும் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும். ஆனால் அவைகள் பெருமளவில் நிகழாத சிறு சிறு phases என சொல்லப்படும் சின்னங்சிறு காலகட்டங்களும் வாழ்க்கையில் இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த சிறு காலகட்டங்களை மட்டும் குறிப்பாக cherry pick செய்து சுவாரஸ்யமாக அதே நேரத்தில் தன்னளவில் நிறைவான கதைகளாகவோ படங்களாகவோ எவரேனும் எடுக்க முயற்சித்திருக்கிறார்களா என்று யோசித்தால் எனக்கு பலநேரங்களில் விடை கிடைக்காமலே இருந்திருக்கிறது- நான் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் வாசிக்கும் வரை.

***

ஹென்றி என்ற ஒரு ஊர் பேர் தெரியாத ஒருவன் ஒரு சிறிய கிராமத்திற்குள் நுழைகிறான். எல்லா கிராமங்களைப்போலவும் வெவ்வேறு விதமான அடையாளங்கள் பொருந்திய மனிதர்களையும் உள்ளடக்கி ஒரு தனி உலகம் போல் இயங்கி வரும் அந்த கிராமத்திற்குள் எந்த ஒரு செயற்கை அடையாளத்தையும் சுமக்காத ஒரு இளைஞன் புகுந்து என்ன என்ன செய்கிறான் என்பதே அந்த நாவலின் கதை. இக்கதையை கேட்டவுடன் இது ஏதோ ஒரு புரட்சிகரமான Sivaji The Boss கதையை போல இருக்குமோ அல்லது மார்க் ட்வைன் எழுதிய A Connecticut yankee in King Arthur’s Court நாவல் பாணியில் பல ‘புதுமை vs பழமை’ தகராறுகள் நிரம்பிய நகைச்சுவை கதையை போல இருக்குமோ என்றெல்லாம் நீங்கள் முதலில் எண்ணலாம். ஒன்று, பழமையும் ஒருவிதமான பிற்போக்கான தன்னிறைவும் பொருந்திய அந்த கிராமம் ஒரு சர்வதேச குடிமகன் போல் திகழும் அந்த ஹென்றியை ஏதோ ஒரு வகையில் மாற்ற வேண்டும் அல்லது, அவனது புதுமைகளையும் கட்டற்ற தன்மையையும் பார்த்து கிளர்ச்சி அடையும் அந்த கிராமம் Swades படம் போல் நல்லதொரு பாதையில் முன்னேறி செல்லவேண்டும் என்ற இரு சாத்தியக்கூறுகளை மட்டுமே முதலில் நான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் இதையெல்லாம் பற்றி துளியும் கவலைப்படாமல், ஒரு கதையை எந்த வகையில் நகர்த்தினால் அந்த கதை எழுத்தாளன் ஆகிய தனது சுயத்திற்கு எந்த விதத்திலும் துரோகம் இழைக்காமல் இருக்குமோ அதை மட்டுமே கருத்தில் கொண்டு ஜெயகாந்தன் அந்த கதையை எழுதி இருக்கிறார். அந்த நாவல் அமரத்துவம் அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று நான் சொல்ல தேவை இல்லை. உலக இலக்கியங்களில் classics என அழைக்கப்படும் அத்தனை படைப்புகளுக்கும் இந்த தன்மை உண்டு என்பது ஒரு அளவுக்கு இலக்கிய அறிமுகம் கொண்ட அனைவருக்கும் ஏற்கனவே  தெரிந்திருக்கும்.

எனவே ஏற்கனவே classic என்று அறியப்பட்ட இந்த ஜெயகாந்தனின் நாவலை வாசகன் ஆகிய எனக்கு மேலும் நெருக்கமாக ஆக்கியது எது? நான் முன்னரே குறிப்பிட்ட கதையின் absolute lack of conflict எனலாம். ஹென்றி கதையின் ஆரம்பத்தில் அந்த ஊரில் ஒரு பழைய சொத்துக்கு உரியவனாக தன்னை ஊராரிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அந்த சொத்துக்கு சமமான பாத்தியதை பொருந்திய இன்னொரு கதாபாத்திரமும் வருகிறது. அவர்களுக்குள் சண்டை வெடிக்கும் என நான் நினைத்தேன், வெடிக்கவில்லை. ஒரு வெள்ளைக்கார பெண்ணும் ஒரு இந்திய ஆணும் எடுத்து வளர்த்த அடையாளம் அற்ற அந்த ஹென்றியை பழைய சனாதன, சாதிய கோட்பாடுகள் வழி வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று நினைத்தேன், அதுவும் நடக்கவில்லை. அவன் அந்த சொத்துக்கு உரிமை கோருகிறான். அது கொடுக்க படுகிறது. பிறகு அந்த சொத்தை புதுப்பிக்க முற்படுகிறான் ஊரே அவனுக்கு உதவு செய்கிறது. கதை முடியும்போது அந்த ஊரிலே பாலோடு நீர் சேருவது போல அவனும்  ஒரு அங்கமாகிறான். இவ்வளவு தான் கதை. இதை ஏன் நான் படிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நான் முன்னர் சொன்னதை தான் மீண்டும் வேறு விதமாக சொல்கிறேன். நம் ஊரில் இருக்கும் முக்கால்வாசி மக்கள் மனதளவில் நல்லவர்கள். அவர்களுக்கு சாதிய நம்பிக்கைகள் இருக்கலாம். அவர்கள் நமக்கு பிடிக்காத கோட்பாட்டை சுமப்பவர்களாக இருக்கலாம். நமது அரசியலோடு ஒத்துப்போகாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மனதறிந்து யாரையும் வெறுப்பவர்களோ அல்லது அவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களோ அல்லர். அவர்கள் செய்யும் தவறுகளில் பல ஒரு விதமான பிரக்ஞையற்ற செயல்பாடுகள் மட்டுமே. பல சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் வாரி எடுத்து உண்ணும் நாமும் கூட அவற்றுக்கெல்லாம் ஒன்றும்  விதி விலக்கல்ல. 

எனவே, இப்படிப்பட்ட மக்கள் பொருந்திய ஒரு சமூதாயத்தில் தனிப்பட்ட conflict என சொல்லப்படும் சச்சரவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும். வாழ்வின் மீது பெரிய எதிர்பார்ப்புகளும் முன்முடிவுகளும் இல்லாத ஒருவரால் வாழ்வின் சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். சவால்கள் இல்லாத காலகட்டத்தில் எந்த ஒரு conflict -ஓ அல்லது drama –ஓ இல்லாமல் வாழ்க்கை செல்லும். ஆனால் அந்த காலகட்டங்களை கதைகளாக உருவாக்கியவர்கள் வெகு சிலர். நான் அறிந்தது ஜெயகாந்தனை மட்டுமே. 

***

அந்த புத்தகத்தை அளித்த என் நண்பரை மீண்டும் சந்தித்தேன் நேற்று. அவரிடம் மேற் சொன்ன அனைத்தையும் விளக்கினேன். அவருக்கு இலக்கிய அறிமுகம் என்பது அவ்வளவாக கிடையாது. அவர் சொன்னார் “ஜீவா நீ சொன்னது போல conflict -ஏ இல்லாமல் என் வாழ்க்கை இருந்ததே கெடயாது. சொல்லப்போனால் நீ சொல்வதில் எனக்கு பெரிய உடன்பாடே இல்லை. நீ சொல்வது எனக்கு புரியவும் இல்லை. இந்த புத்தகம் வாசித்தது எனக்கு நேர விரயம் தான்” 

நான் அவரிடம் மேலும் எதுவும் பேச வில்லை.

இலக்கியத்தை அவர் சரியாக புரிந்து வைத்திருப்பதாகவே எனக்கு தோன்றியது.

தனது சுயத்தை பொருத்தி ஒரு படைப்பை விரிக்கும் வாசகனால் மட்டுமே அந்த படைப்பை சரியாக புரிந்து கொள்ள முடியும். என் வாழ்வின் ஆரம்ப காலகட்டம் நேர்கோட்டில் சென்றதால் எனக்கு conflict -ஏ  இல்லாத கதைகளின் தேவை இருந்தது. அந்த தேவை இருந்ததால் எனக்கு அந்த நாவல் பிடித்தது. அவருக்கு அப்படி ஒரு அனுபவம் இல்லை அதனால் அவர் அந்த நாவலை நிராகரிக்கிறார். அது தான் நேர்மை. அவருக்கு புரியாத நாவலை நான்கு பேர் கேலி செய்து விடுவார்கள் என பயந்து தனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது என்று சொல்லி அவர் பாசாங்கு செய்யவில்லை. 

இந்த சம்பவத்தின் போது எனக்கு அந்த நாவலில் வரும் ஒரு முக்கியமான இடம் நினைவிற்கு வந்தது. ஹென்றியின் நண்பன் ஒருவன் இந்த கிராமம் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் இதனை பலவாறு மாற்றங்கள் செய்து முன்னேற்ற வேண்டும் எனவும் அவனிடம் சொல்லுவான். அதற்கு ஹென்றி சரி என்று மட்டும் சொல்லுவான். அந்த நண்பன் ஆர்வம் கொண்டு ஹென்றியிடம் நீங்கள் ஏன் இது பற்றி எதுவும் கருத்து சொல்ல முற்படுவதில்லை என்று கேட்கும் பொருட்டு ஹென்றி இப்படி சொல்லுவான் என நினைக்கிறேன் -“நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் இங்கே இருப்பவை அப்படியே இருப்பதிலும் ஓர் அழகு இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு தேவை அவ்வளவுதான்!”