Readers Write In #588: சில பயணங்களில், சில மனிதர்கள்- 1

Posted on June 25, 2023

1


By Srinivasan Sundar

எனது வேலை என்னை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதுண்டு. பொதுவாக அனைத்து பயணங்களுமே விமானத்தில் தான். கிட்டத்தட்ட டவுன் பஸ் போல விமானங்கள் எனக்கு ஆகிவிட்ட காலங்கள் இவை. இதற்கு முன் வான்வழி பயணம் என்றாலே எனக்கு ஒரு விதமான பீதி.. வேலை இன்டர்வியூ போல்.செக்யூரிட்டி செக், போர்டிங் பாஸ், செக்கின்பேக்கேஜ், போர்டிங் கேட், வெப்செக்கிங், ஹாண்ட்பேக்கேஜ், வகைரா குழப்பங்கள். மன உளைச்சல். ஆனால் இப்போது எதுவும் அறவே இல்லை. காரணம் – நான் ஏற்கனவே சொன்னதுதான்.

சில பயணங்கள் மனதில் நிற்பவை; சுவாரசியமானவை,  தாமதமானவைபோன்று. ஒரு முறை மணிப்பூர் செல்லும் பொழுது, விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே மீண்டும் டெல்லியில் எமர்ஜென்சி லேண்டிங் செய்யப்பட்டது. காரணம் என் அருகில் இருந்த பயணி ஒருவருக்கு வந்த வலிப்பு. மிகவும் கஷ்டப்பட்டார்.. நாக்கிலிருந்து ரத்தம் வேறு. ஆனால் இந்தக் கதை அவரைப் பற்றியது அல்ல.

பெங்களூர்-டெல்லி இரவுப்பயணம். கிளம்பும் பொழுது எனது வலப்பக்கத்தில் உள்ள இருக்கை காலியாக இருந்தது. சரி மேலும் வசதியாக பயணிக்க ஒரு வாய்ப்பு என்று சிறிது சந்தோஷப்பட்டேன். கடைசி தருவாயில், சினிமா போலீஸ் போல்,விமானம் ஓட்டத்திற்கு ஒன்று இரண்டு நிமிடங்களுக்கு முன்பு, ஒருவர் அறக்கப்பறக்க தள்ளாடி கையில் ஒரு பீட்சாடேக்-அவே பேக் உடன் வந்து அங்கு உட்கார்ந்தார். சந்தோஷம்பறந்தது. அவர் ஒரு வடக்கு வாசி. வயது சுமார் 33 எனலாம். பல மோதிரங்கள் அனிந்திருந்தார். நீலம், பச்சை, மஞ்சள்..

திடும் என்று உட்கார்ந்தது மட்டும் அல்லாது, தன் தாமதத்தை சிறிதளவும் பொருட்படுத்தாது, எவரைப் பற்றியும் கவலைப்படாமல், ஏர் ஹோஸ்டஸ் அழைப்பு பட்டனை அவர் அழுத்தினார். வேண்டா வெறுப்பாக, புன்னகையுடன்,ஏர் ஹோஸ்டஸ் அவசரமாக வந்தார். வந்தவர் கையில் இவர் அந்த பீட்சாவை திணித்தார்.‘இதை பத்திரமாக வைத்திருக்கவும்’ என்று சொல்லி விட்டு ‘போ போ’ என்று அவரை செய்கையால்துறத்தினார்.

ஆசிரியர் தொழில் ஒரு மேன்மையான தொழில். சொல்லப்போனால் ஒரு ஆசிரியராக இருப்பது தொழிலுக்கும் அப்பாற்பட்ட விஷயம். ஆசிரியராக பணிபுரிய பொறுமை மிகவும் அவசியம். அதேபோல ஒரு  நல்ல ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்றால் நீங்கள் பொறுமையின் உச்ச கட்டத்தில் திகழ்பவராக இருக்க வேண்டும். பீட்சாவை வாங்கிக் கொண்டு அந்த அம்மணி விரைவாக அவரின் இடத்திற்கு சென்றார். புன்னகையுடன். சில வினாடிகளிலேயே விமானம் தன் ஓட்டத்தை ஆரம்பித்தது.

இதற்குள் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் புலப்பட்ட உண்மை – என் பக்கத்தில் இருப்பவர், மிகவும் தாமதமாக வந்தவர் – ஒரு குடி மகன் என்றும், அப்போது அவர் வேறு ஒரு உலகில் இருக்கிறார் என்றும். எனக்குஅவர் மீது ஒரு கடுப்பு உண்டானது: தாமதமாக வந்தவர் ஏர் ஹோஸ்டஸ்-இடம் தேவையற்ற வேலை வாங்கினார்;பொதுவாக சில தொந்தரவுகள் செய்தார். அவரின் சுய நினைவு சிறுதுமங்கி இருந்ததால் அவற்றை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இரவுவேறு; அனைவரும் உறக்க நிலையில் இருந்தோம்.

விமானம்பறந்தது. குடிமகன் மட்டை ஆகிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து ஏர் ஹோஸ்டஸ் குடி மகனின் பீட்சாடப்பாவை கொண்டு வந்தார். அவரை எழுப்பினார். நானும் உதவினேன். வெறுப்புடன் எழுந்த அவர் கோபமடைந்தார். தள்ளாடிக்கொண்டே, ஜாடமடையாக ஹோஸ்டஸ்-ஐ ‘எனக்கு அது வேண்டாம்.. போ போ’,  என மீண்டும் துறத்தினார். அம்மணி வேறு வழி இல்லாமல் சென்றார். கையில் பீட்சாவோடு. எனக்கு பயங்கர எரிச்சல்.

இப்போது தூக்கம் கலைந்த குடி மகன் தனது ஹெட் போனை காதுகளுக்குள் பொருத்திக்கொண்டார். சில நொடிகளிலேயே பாட்டுக்களை மிகவும் வெறித்தனமாக கை காலை வீசியபடி ரசிக்க ஆரம்பித்தார். தாளம் போட்டார். கிட்டத்தட்ட ஆட்டம் போட்டார். எனது இருக்கையும்ஆடியது. கோபம் தலைக்கு ஏற, பொறுமை காத்தேன். பாட்டு ஒன்று முடிந்தது. சிறு மணித்துளி நேரம் அமைதி.

பிறகு மறுபடியும் எனது இருக்கை ஆட ஆரம்பித்தது. கோபமோ கோபம்! இருந்தாலும் அப்படி என்னதான் பாட்டு கேட்கிறார் என்று அவர் போனைப் பார்த்தேன். அது ஒரு ஐ-போன். ஏதோ வெளிநாட்டு பாட்டு-இந்திப் பாட்டு கலந்த ப்ளேலிஸ்ட். குடிமகன் பாட்டில் மெய் மறந்து எனது இருக்கையையும் சேர்த்து ஆட்டிக்கொண்டிருந்தார். பிறகு மறுபடியும் சிறு அமைதி; பாட்டு முடிந்தது.

அடுத்த பாட்டு. வழக்கம் போல் எனது இறுக்கையின் ஆட்டமும் தொடங்கியது.

பொறுத்தது போதும் பொங்கி எழு! என்று ஏர் ஹோஸ்டஸ்-ஐ அழைக்கும் பட்டனை அழுத்தும் தருவாயில்.. அப்படி என்னதான் தல போர பாட்டு இப்போது என்று குடிமகனின் போனை பார்த்தேன்: ‘பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்…’!

உருகினேன்.

குடிமகன் மேல் எனக்கு இருந்த வெறுப்பு கரைந்து ஒருவிதமான மரியாதையாக மாறியது. உனக்குள் இப்படி ஒரு ரசனையா நண்பா! வாழ்க நீ பல்லாண்டு!

இதற்கிடையில் குடிமகனின் போன் கீழே விழுந்தது. அதையும் கவனிக்க இயலாமல் குடிமகன் மிதந்து கொண்டிருந்தார். நான் சிரமப்பட்டு குனிந்து அவரின் போனை எடுத்து அவர் சீட்டில் வைத்தேன். குடிமகன் அதையும் கண்டு  கொள்ளவில்லை. அவர் தப்பு அல்ல!

இதற்கிடையே அம்மணி எனது உணவு பாக்கெட் கொண்டு வந்து வைத்தார். ஆங்கிலத்தில் butterfingers என ஒரு expression உண்டு. அதாவது அச்சு-பிச்சுத்தனமாக சாமான்களை கீழே போடுபவர்கள் என்று பொருள் கொள்ளலாம். சில சமயங்களில் நானும் அந்த வகை ஆள் தான். உணவு டப்பாவை திறக்கும் பொழுது அதில் இருந்த ஸ்பூனை கீழே  நழுவ விட, அது சீட்டுகடியில் கண் காணாமல் எங்கேயோ சென்று மறைந்தது. அடடா ..வட திங்கற ஸ்பூன்போச்சே! என பசி கலந்த சோகத்தில் நான் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டேன். ஆனால்..அப்போது மிகவும் சுலபமாக, உடனடியாக குனிந்து அந்த வெள்ளை ஸ்பூனை எடுத்து கொடுத்தார் – அந்த இசைஞானி ரசிகர் ஆன எனது செல்லக்குடி மகன்.

***